செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாணிக் காயிதம்' படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான இயக்குனர்கள் பட்டியலில் தவறாமல் இடம்பெறுபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் என்பதால் 'சாணிக் காயிதம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
'சாணிக் காயிதம்' படம் கதை 1979 ல் நடப்பதாக காட்டப்படுகிறது. பரதேசபட்டினம் என்ற ஊரில் மேல்சாதியாய் தன்னை நினைத்து கொள்ளும் ரைஸ் மில் முதலாளி தவறாக பேசியதால், அங்கு வேலை செய்யும் வேறு சாதியை சேர்ந்தவர் தட்டி கேட்கிறார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு வேலை போகிறது. பின்னர் மீண்டும் மன்னிப்பு கேட்டு வேலையில் சேர வரும் போதும் மனைவியை பற்றிய தவறாக பேசியதால் முதலாளிகள் கூட்டத்தை அவமதித்து விட்டு செல்கிறார்.
இதற்கு பழிவாங்குவதற்காக போலீஸ் கான்ஸ்டெபிளாக இருக்கும் தொழிலாளியின் மனைவி பொன்னியை சாதி வெறி கும்பல், கொடூரமாக தாக்கி, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கிறது. அதோடு பொன்னியின் கணவர், பெண் குழந்தை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் குடிசைக்கு தீ வைத்து விடுகிறார்கள். தனது குடும்பத்தை அழித்து, தன்னையும் நாசம் செய்த கும்பலை பொன்னி எப்படி பழிவாங்குகிறாள் என்பதே 'சாணிக் காயிதம்' படத்தின் கதை.
அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ராக்கியை போலவே இந்தப்படமும் பழிவாங்கல் கதை. செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் போட்டி போட்டு கொண்டு நடிப்பில் மிரட்டியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவும் வேற லெவலில் அமைந்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் படத்தில் இல்லாததது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.



0 Comments