மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் நிறைய படங்கள் தமிழகத்திலும் மிகப் பெரிய அளவு வசூல் செய்துள்ளது. சில நேரடி தமிழ் படங்களிலும் துல்கர் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கடந்த ஆண்டு வெளியான குருப் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடன மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் நடித்துள்ளார் துல்கர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.
துல்கர் சல்மான் நடிப்பில் 2015-ல் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்திலுள்ள பாடலின் ஒரு வரி இப்படத்திற்கு 'ஹே சினாமிகா' என்கிற தலைப்பாக மாறியுள்ளது.
துல்கரும் அதிதியும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர், இரண்டு வருடங்களுக்கு பிறகு அதிதிக்கு துல்கரை சில காரணங்களுக்காக பிடிக்காமல் போகிறது. இவரிடமிருந்து விவாகரத்து வாங்க காஜல் அகர்வாலை நாடுகிறார். இறுதியில் இருவரும் பிரிந்தார்களா அல்லது சேர்ந்தார்களா என்பதே ஹேய் சினாமிகா படத்தின் கதை. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத, பஞ்ச் டயலாக் இல்லாத இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு துல்கருக்கு தனி பாராட்டுக்கள்.
அதிதி ராவ் மற்றும் காஜலின் மேக்கப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்,முக்கியமாக க்ளோஸ்-அப் காட்சிகளில் எமோஷன்களை மூவரும் சிறப்பாக கையாண்டுள்ளனர்.ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் யோகிபாபு ரசிக்க வைக்கிறார். ஆர்ஜே விஜய் மற்றும் நட்சத்திரா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஆர்ஜே வாக துல்கர் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. கண்டிப்பாக ஹே சினாமிகா கணவன் மனைவி இடையே உள்ள காதலை தட்டி எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comments