சில மனிதர்களுக்கிடையிலான, ஈகோ, பொறுப்பின்மை, மேதாவித்தனம், கோபம், எனப் பல்வகை உணர்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தத் திரைக்கதை, தனது கதையாகப் பார்வையாளனுக்குத் திரையில் தெரியும் வகையிலான நம்பகத் தன்மை மிகுந்த நெருக்கமான காட்சிகளாலும், பொருத்தமான கலைஞர்களாலும், உருவாகியிருக்கின்றது " சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படம்.
விஷால் வெங்கட் என்கிற ஆறுமுக இயக்குனர் இயக்கத்தில் நாசர், அசோக் செல்வன், ரேயா, அபிஹாசன், மணிகண்டன், ரித்விகா, பானுப்பிரியா, அஞ்சு குரியன், பிரவீன் பாலா, கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வானம், மாநகரம் போன்ற படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹைப்பர்லிங்க் திரைப்படங்களுள் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படமும் ஒன்றாகும்.
நான்கு வித்தியாசமான கதைகள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் தங்களுக்கு தெரிந்த வாழ்க்கைமுறையை, அவர்களை சுற்றி இருக்கும் சூழ்நிலையை பிடித்துக்கொண்டு எது சரியோ அதையே செய்து வாழ்கின்றனர். எது சரியில்லை எது தவறு என்பதை ஒவ்வொருவரும் தனித்தனியாக உணரும் பொழுது படத்தின் ஒட்டு மொத்த கதையும் வீரியம் பெறுகிறது.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிப்பதும் கருத்துக்களில் முரண்படுவதும், அலட்சியங்களால் பல சூழ்நிலைகளில் அவலப்படுவதும் , எதார்த்த வாழ்க்கையை மீறி ஒரு பகட்டான, போலியான மனநிலைக்கு தள்ளப்படும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நிறுத்தி நிதானமாக இப்படம் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.
0 Comments