'காக்கா முட்டை' தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். அதன் பின்பு அதன் இயக்குநர் மணிகண்டன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. காக்கா முட்டையைத் தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை மணிகண்டன் இயக்கினார். அதில், ஆண்டவன் கட்டளை மணிகண்டனின் திறமையை இன்னும் அதிகமாய் பறை சாற்றியது. அதன்பின் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவரும் சினிமா ‘கடைசி விவசாயி’.
படத்தின் தலைப்பை வைத்து இது விவசாயிகளின் சோகக் கதையினை, அவல வாழ்க்கையை சொல்லப் போகிற சினிமா எனத் தோன்றும். ஆனால் மணிகண்டன் இந்த சினிமாவை வேறு விதமாக கையாண்டிருக்கிறார். ஒரு சம்சாரியின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக நின்று படம் பிடித்து நமக்குக் காட்டியிருக்கிறார்.
விஜய் சேதுபதி, யோகி பாபு எனவே இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ள மாயாண்டி என்பவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். உண்மையான அப்பாவித்தனமான விவசாயி என்பதால் அவர் அப்படியே இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் உள்ளார். படத்தில் நீதிபதியாக நடித்துள்ள ரேய்ச்சல் மிகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.
விவசாயம் ஒன்று மட்டுமே தெரிந்த முதியவர் மாயாண்டி. காவலர் காக்கிச்சட்டையில் வந்ததைப் பார்த்து மின்வாரிய ஊழியர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவிற்கு அப்பாவித்தனமான மனிதர். இதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் யோகி பாபு. அதேபோல் விஜய்சேதுபதி வாழ்க்கையில் நாட்டம் இல்லாத நபராக இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களும் விவசாயிகள் பற்றியே அருமையையும் பேசுவது தான் இந்த படத்தின் கதைக்களம் ஆகும்.
ஊராரின் எளிய மொழி வழக்கில் அவ்வளவு ஒரு ஈர்ப்பு. கிராமத்து நையாண்டி, யாரையும் யாரும் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை எனப் பல விஷயங்களைச் சேர்த்து அழகாகக் காட்சிகளைக் கோர்த்திருக்கார் இயக்குநர். கடைசி விவசாயியை தானே எழுதி ஒளிப்பதிவு செய்து தயாரித்திருக்கிறார் மணிகண்டன்.
0 Comments