கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால், அப்பாவுக்கு ஆபத்து வருவதைக் கனவின் வழி அறிந்துகொள்ளும் மகன் அவரைக் காப்பாற்ற நினைப்பதே ‘கார்பன்’ திரைப்படத்தின் கதையாகும்.
அறிமுக இயக்குனர் ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கார்பன். இந்த படத்தில் விதார்த், தான்யா, மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மாரிமுத்து படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஐடிஐ படித்துவிட்டு போலீஸ் வேலைக்குத்தான் போவேன் என்று அடம்பிடிக்கிறார் விதார்த். அவரது அப்பா மாரிமுத்து கார்ப்பரேஷனில் குப்பை லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். கிடைக்கும் பென்ஷன் படத்தில் மகனை போலீஸாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, வேலைக்குப் போய் முதல் மாத சம்பளம் வாங்கிவிட்டுத்தான் அப்பாவிடம் பேசுவேன் என்று சத்தியம் செய்கிறார் விதார்த். இதனால் இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் பேசிக்கொள்கிறார்கள்.
தற்காலிகமாக ஒரு கம்பெனியில் வேலைக்குப் சென்று முதல் மாத சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து உறங்கும்போதுதான் அப்பாவுக்கு விபத்து நடப்பதுபோல் கொடுங்கனவு வருகிறது. அலறி எழுந்து அப்பாவைக் காப்பாற்ற ஓடுகிறார். அடிபட்டுக் கிடக்கும் அப்பாவை அணைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார்.
அப்பாவுக்கு என்ன ஆனது, விபத்துக்கு யார் காரணம், அது விபத்துதானா, அதன் பின்னணி என்ன, அப்பாவைக் காப்பாற்ற முடிந்ததா, விதார்த்தின் போலீஸ் கனவு என்ன ஆனது போன்ற கேள்விக்கு பதில் சொல்வதுதான் படத்தின் மீதி கதை.
0 Comments