தேள் திரைப்படத்தில் பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சத்யா இசை அமைத்துள்ளார் மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கி, அதை செலுத்தாதவர்களை அடித்து உதைத்து பணம் வாங்கும் அடியாளாக வேலையை பார்க்கிறார் பிரபுதேவா. ஆதரவற்றவரான பிரபுதேவாவை சந்திக்கும் ஈஸ்வரி ராவ், நான்தான் உனது தாய் என்று கூறுகிறார். கோபத்தில் ஈஸ்வரி ராவை அடித்து உதைத்து அனுப்பும் பிரபுதேவா.
தனது தாயை மதிக்காமல் அடிதடியில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா திடீரென திருந்தி தனது தாயுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். ஆனால் பிரபுதேவாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை பழி வாங்க ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், ஈஸ்வரி ராவை மர்ம நபர்கள் கடத்துகிறார்கள். தாயை தேட ஆரம்பிக்கும் பிரபுதேவா, இறுதியில் ஈஸ்வரி ராவை கண்டுபிடித்தாரா? இல்லையா? கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் கதை.
பிரபு தேவா இப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார். ஈஸ்வரி ராவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அம்மா சென்டிமென்ட் படங்கள் எத்தனையோ தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமானது.தாய், மகன் பாசத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிகுமார்.
கடன் பிரச்சினையால் கஷ்டப்படுகிற பல குடும்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பணத் தேவைக்காக குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் உறவுகள் அவர்களின் வலியையும், வேதனையையும் தெளிவாக எடுத்துரைக்கிறது “தேள்” திரைப்படம்.
0 Comments