இலங்கைப் போரில் உயிர்பிழைத்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர் ராக்கியின் பெற்றோர். சென்னையில் லோக்கல் டானாக இருக்கும் மணிமாறனிடம் (பாரதிராஜா) அடியாளாக சேர்ந்து ரவுடித்தனங்கள் செய்கிறார் ரவியின் தந்தை. தந்தை இறந்த பின்பு அவர் செய்துகொண்டிருந்த அனைத்தையும் ராக்கி செய்தான். மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையால் மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மாவை (ரோகிணி) கொல்ல பதிலுக்கு ராக்கி மணிமாறனின் மகனைக் கொல்ல இதனால் மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையே பகை வெடிக்கிறது. இதனைத் தொடர்ந்து ராக்கியின் தங்கை அமுதா (ரவீனா ரவி) காணாமல் போகிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் ராக்கி தன் தங்கையைக் கண்டுபிடித்தாரா? மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையிலான பகை தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கான பதிலை ‘ராக்கி’ படத்தின் திரைக்கதை சொல்கிறது.
'கொழந்த மூஞ்சிடா இது' என்கிற அடியாளின் நக்கல் சிரிப்புடன் ஒரு காட்சியில் அறிமுகமாகிறார் வசந்த் ரவி. பழிவாங்கலில் தனி ருசி கண்ட மணிமாறன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா. இத்தனை ஆண்டுக்கால அனுபவமும், பாரதிராஜாவின் குரலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு வலு சேர்க்கிறது. சில காட்சிகளே வந்தாலும், குருதி படிந்த ஓவியமாய் மனதில் பதிகிறார் ரவீணா ரவி. பூ ராமு, ரோஹினி எனப் படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும், கதையின் சுவாரஸ்யத்துக்குத் துணையாய் நிற்கிறார்கள்.
படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் ஷ்ரீயாஸ் கிருஷ்ணாவை தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல மிளிர்கிறது. குறிப்பாக அந்த காரிடார் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் உலகத் தரம்.
வழக்கமான ஒரு கதையைக் கையிலெடுத்து அதை எந்தவித க்ளிஷேவும் இன்றி புதுமையாகவும், ‘ரா’வாகவும் சொல்லிய விதத்தில் ஜெயிக்கிறது ‘ராக்கி’.
0 Comments