சென்னை: 1983ஆம் ஆண்டு இந்திய மக்களால் மறக்கமுடியாத உலக கோப்பை கிரிக்கெட் பந்தயம் பற்றியும் அந்த மாபெரும் வெற்றியடைந்த தருணத்தையும், கிரிக்கெட் ரசிகன் ஒவ்வொருத்தரும் இன்று வரை திரும்ப திரும்ப நினைத்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட தருணத்தை பொக்கிஷமான அனுபவத்தை வீடியோ காட்சிகளாக அதிகமான பதிவுகள் இல்லை என்பதுதான் உண்மை. இதை மூலக் கருவாக கொண்டு 83 என்கின்ற இந்த திரைப்படம் 1983ஆம் ஆண்டு எவ்வளவு கஷ்டப்பட்டு உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் வென்றது என்பது தான் படத்தின் ஒட்டுமொத்த கதை.
கபில் தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்திடாத கிரிக்கெட் வீரர்களையும் மனதில் பதிய வைக்கும்படி படம் எடுக்கப்பட்டதற்கு நடிகர்களின் பங்கு மிக முக்கிய காரணமாகும். ரன்வீர் சிங், தீபிகா படுகோன், போமன் இராணி, ஜீவா, தஹிர் ராஜ் பாசின், அம்மி விர்க், பங்கஜ் த்ரிபாதி முதலியோர் படத்தில் நடித்திருக்கிரார்கள். குறிப்பாக, சீக்காவாக நடித்திருக்கும் ஜீவா அப்ளாஸ் வாங்குகிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், காமெடி, அழுகை என எமோஷன்கள் மாறி மாறி வந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
வெற்றியடைந்த ஒரு கிரிக்கெட் தொடரை வெறுமனே படமாக்கி வெற்றி அடையலாம் என்று நினைக்காமல், அதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்கில் அமர்ந்து 3 மணி நேரத்திற்குள் ஒரு முழு உலகக் கோப்பை தொடரை கண்டுகளிக்கும் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும். அதற்கு ஒளிப்பதிவு மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது.
0 Comments