சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமா Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாழ்வில் அனைத்தும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் தம்பி ராமையாவிற்கு மனைவி மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருக்கும் அவர் காரில் பயணம் செல்லும் போது அவரது வாழ்க்கையினையே புரட்டிப் போடும் ஒரு சம்பவம் நடக்கிறது. இங்குதான் சமுத்திரக்கனியின் வருகை நிகழ்கிறது. தன்னை காலம் என அறிமுகபடுத்திக் கொள்ளும் சமுத்திரக்கனி பிறகு தம்பிராமையாவுடன் பயணிக்கும் நாள்களின் வித்யாசமான காட்சிகளின் தொகுப்பே ‘விநோதய சித்தம்’.
தன் மொத்த பலத்தையும் கொண்டு இந்த சினிமாவை அருமையாக உயர்த்திப் பிடித்திருக்கிறார் தம்பிராமையா. மிக அருமையான நடிப்பு. இந்த கதாபாத்திர வடிவமைப்பு கூட நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது. முழு அதிகாரமும் ஆணவும் கொண்ட அப்பாவாகவும் இல்லாமல், அன்பு, பாசம் சராசரி அப்பாவாகவும் இல்லாமல் மிகப் பொறுப்பாக தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சதா சிந்திக்கும் கதாபாத்திரமாக தம்பிராமையா வருகிறார். அவரது வாழ்வில் கொஞ்சம் பின்னே சென்று காலத்தில் அவர் செய்த சில தவறுகளையும் அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி பல திறப்புகளைத் தருகிறார் சமுத்திரக்கனி. இந்த காட்சிகள் புதுமையாக உள்ளன.
முந்தைய சமுத்திரக்கனி படங்களில் இருக்கும் பாடல், சண்டைக்காட்சிகள் என எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களில் படத்தில் இல்லாதது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், சி.சத்யாவின் இசையின் படத்துக்கு எது தேவையோ அதை சரியாகக் கொடுத்திருக்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள். காட்சிக்குக் காட்சி சமுத்திரக்கனிக்கு ஒரு பக்க வசனத்தை கொடுத்து கருத்துமழை பொழியவிடாமல் நறுக்கு தெறித்தாற்போல் நச் என்று ஒற்றை வரியில் பார்வையாளர்களுக்கு புரியவைக்கும் இயல்பான வசனங்கள் படம் முழுக்க வருகின்றன. அதே போல படம் முழுக்க ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படத்தின் ஓட்டத்துக்கு கைகொடுத்துள்ளன.
0 Comments