சத்தியத்தை நம்பும் அண்ணனுக்கும், சட்டத்தை நம்பும் கணவனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்ணின் கதையே ‘உடன்பிறப்பே’.
வைரவனுக்கு (சசிகுமார்) தங்கை மாதங்கிதான் (ஜோதிகா) எல்லாம். இவர்கள் இருவரின் பாசத்தைப் பார்த்து ஊரே மெச்சுகிறது. வைரவனின் அடிதடி, வன்முறை மாதங்கியின் கணவர் சற்குணம் வாத்தியாருக்கு (சமுத்திரக்கனி) சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதை வெளிப்படையாகச் சொன்ன பிறகும் வைரவனால் மாற முடியவில்லை. இந்நிலையில் ஒரு அசம்பாவிதச் சம்பவத்தால் வைரவன் வீட்டை விட்டு மனைவி, மகளுடன் வெளியேறுகிறார் சற்குணம் வாத்தியார். அதற்குப் பிறகு வைரவனும் வாத்தியாரும் ஒரே ஊரில், ஒரே தெருவில் ஏன் 10 வீடுகள் தள்ளியிருந்தும் பேசிக்கொள்ளவில்லை.
அண்ணனிடம் தான் பேசுவதைக் காட்டிலும் தன் கணவனைப் பேசவைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் செயல்படுகிறார் மாதங்கி. ஆனால், அடுத்தடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போய்விடுகின்றன.
இச்சூழலில் மாதங்கி மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது. தாய்மாமன் இல்லாமல் திருமணமா எனப் பிரச்சினை எழுகிறது.
இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சசிகுமார். ஊர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது, அடிதடி என்று கெத்தாகவும், தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது அறிமுக காட்சி சிறப்பு. அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல் கலையரசன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
0 Comments