நடுவன் படத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், அருவி பாலா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ளார்; ஷாரங் இயக்கியுள்ளார்.
கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத் தான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். பரத்துக்கு ஒரு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார்.இதையடுத்து, ஏற்படும் பிரச்னைகள், மோதல்களே மீதிப் படம்.
இரு நண்பர்கள், திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு, ஒரு சிறிய திருட்டுக் கும்பல், ஒரு கொலை என ஒரு எளிமையான த்ரில்லர் கதை.
தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.சின்னச் சின்ன பாத்திரங்களில் வரும் ஜார்ஜ் மரியானும் அருவி பாலாவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
0 Comments