KAMALI FROM NADUKKAVERI (TAMIL) MOVIE REVIEW
ஆனந்தி நடிப்பில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கமலி From நடுகாவேரி. Abbundu Studios நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தீன தயாளன் இசையமைத்துள்ளார்.
நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்த கமலி (ஆனந்தி) ஒரு வித்தியாசமான காரணத்திற்காக சென்னை சென்று ஐ.ஐ.டியில் படிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கான எந்த வசதியும் இல்லாத அவர், நுழைவு தேர்வை எதிர்கொள்வதில் பிரச்சனைகள் உண்டாக, அதை தொடர்ந்து அவர் ஐ.ஐ.டியில் சேருவதற்கு என்ன விஷயங்களை கடந்து வருகிறார்...? ஐ.ஐ.டியில் அவர் சந்திக்கும் சிக்கல் என்ன.? எல்லாம் கடந்து ஒரு சாதாரண கிராமத்து மாணவி எப்படி அக்கிராமத்துக்கே முகவரி ஆகிறாள்.? என்பதே படத்தின் மீதிக்கதை.
தீன தயாளனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தோடு இழைந்து பயணிக்கிறது. சக்திஶ்ரீ கோபாலன் பாடியுள்ள ‘முன்னொரு நாளில்’ பாடல் பாராட்டப்பட வேண்டிய கம்போசிங். ஜகதீஸன் லோகய்யனின் கேமரா நடுகாவேரி முதல் ஐ.ஐ.டிவரை நேர்த்தி காட்டுகிறது. நறுக்கென்ற எடிட்டிங் மூலம் படத்தின் சுவாரஸ்யத்தை குறையாமல் காப்பாற்றியிருக்கிறார் ஆர்.கோவிந்தராஜன்.
கல்வி சார்ந்து பல்வேறு திரைப்படங்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. ஆனால், நுழைவுத் தேர்வுகள் குறித்து அழுத்தமாக பேச முயற்சி செய்ததற்கே இயக்குநர் ராஜசேகர் துரைசாமியை பாராட்டியாக வேண்டும். இந்த தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர் வசதி கூட இன்னும் பல ஊர்களில் இல்லை என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அதிகம் பாடம் எடுப்பது போலும் இல்லாமல், தேவையான ஹ்யூமருடன் அதை சொல்லிய விதத்தில் நம்பிக்கை அளிக்கிறார் ராஜசேகர்.! நிச்சயம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த சூழலில் அவசியமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
இப்படி வலிமையான ஒரு களத்தை எடுத்து கொண்டு, முதல் பாதியில் தெளிவாக கதை நகர, இரண்டாம் பாதியில் அது லேசான சறுக்கலை சந்திக்கிறது. ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தில், யதார்த்தத்தை மீறி அதீத ட்ராமாவாக இருப்பது உணர்வு பூர்வமாக இல்லாமல் போய்விடுகிறது. சொல்ல வந்த விஷயத்தில் இருந்த கவனத்தை சொல்லிய விதத்தில் இன்னும் செலுத்தியிருந்தால், ‘கமலி From நடுக்காவேரி’ தமிழ் சினிமாவில் எப்போதுமே பேசப்படும் படைப்பாக இருந்திருப்பாள்!

0 Comments