SOORARAI POTRU (TAMIL) MOVIE REVIEW
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா வைரஸ் காரணத்தால், இத்திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அபர்னா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வசிக்கும் எளிய ஆசிரியரின் மகன் நெடுமாறன் ராஜாங்கமாக வருகிறார் சூர்யா. இந்தியாவின் கடைக்கோடி குடிமகனும் விமானத்தில் பறக்க வேண்டும். ஏழை முதல் பணக்காரன் வரை எல்லோரையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பதே நெடுமாறன் ராஜாங்கத்தின் கனவு.
சூர்யாவின் இந்த கனவிற்கு பக்கபலமாக உடனிருந்து உற்சாகப்படுத்துகிறார் மாறனின் மனைவி சுந்தரியாக நடித்திருக்கும் அபர்னா பாலமுரளி. சுந்தரிக்கு தான் ஒரு பேக்கரி முதலாளியாக வேண்டும் என்பதே ஆசை. இவ்விருவரும் ஒருவரின் கனவிற்கு ஒருவர் துணையாக இருந்து எப்படி? வெற்றிவானில் பறந்தார்களா? என்பதே ஷாலினி உஷா தேவியுடன் இணைந்து சுதா கொங்கரா அமைத்திருக்கும் திரைக்கதை.
தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏர் ஓட்டும் விவசாயிகள், விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 20000 ரூபாயில் இருக்கும் விமான கட்டணத்தை ஏன் 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ உதாசீனப்படுத்துகிறார். மத்திய அரசு அலுவலகங்கள், ஏவியேஷன் அகாடமி என எல்லா இடங்களிலும் அலைக்கழிக்கப்படுகிறார். லைசென்ஸ் சிக்கல், பெரும் பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் விரிசல், கடன் பிரச்சினை என அடுத்தடுத்து அதிகமான நெருக்கடிகளைச் சந்திக்கிறார். அவரின் கனவு எப்படி நனவானது, ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை உயிரோட்டத்துடன் சொல்வதே 'சூரரைப் போற்று' படத்தின் திரைக்கதை.
நிகித் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றார்போல மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. ஏகாதசி எழுதி செந்தில் கணேஷ் பாடியிருக்கும் ‘மண்ணுருண்ட மேல இங்க மனுச பய ஆட்டம் பாரு’ பாடல் நெத்தியடி தத்துவம். சுதா கொங்கரா தேர்வு செய்திருக்கும் கதாபாத்திரம் ஒவ்வொன்றும் ரொம்பவே பொருத்தம். சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் ரொம்பவே அருமை.
குடியரசுத் தலைவரை அப்படி அசால்ட்டாகச் சந்திக்க முடியுமா, விமானத்தை அசாதாரணமாக ராணுவப் பயிற்சி மையத்தில் அத்துமீறித் தரையிறக்க முடியுமா, தொழிலதிபர்களுக்காக அரசு அதிகாரிகள் அவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா போன்ற கேள்விகளும், செயற்கையான சில சினிமாத்தனங்களும் படத்தில் இருப்பதை மறுக்கமுடியாது.
அதேசமயம் அதையே பெருங்குறையாகச் சொல்லிவிடவும் முடியாது. மொத்தத்தில், சூரரை மட்டுமல்ல, பரிசோதனை முயற்சிக்காக சூர்யாவையும், மேக்கிங் மூளைக்காக சுதா கொங்கராவையும் போற்றலாம்.


0 Comments