MOOKUTHI AMMAN (TAMIL) MOVIE REVIEW

MOOKUTHI AMMAN (TAMIL) MOVIE REVIEW  

 





நடிகர்கள் : நயன்தாரா, RJ.பாலாஜி, ஊர்வசி, மவுலி
இயக்குனர் : RJ.பாலாஜி, NJ.சரவணன்



நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. 


உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூன்று தங்கைகள். அம்மா ஊர்வசி, தாத்தா மவுலி ஆகியோருடன் கஷ்டங்களுக்கு இடையில் வசித்து வருகிறார். அங்கு 11,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் ஒன்றை கட்ட சாமியார் ஒருவர் முயற்சித்து வருகிறார். அதுகுறித்து கேள்விப்படும் பாலாஜி அந்த ஆசிரமம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார். இதற்கிடையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என நம்பி அவருடைய குடும்பத்தினர் அங்கு செல்கின்றனர். அங்கு இரவில் தூங்கும்போது பாலாஜிக்கு மூக்குத்தி அம்மன் நயன்தாரா தோன்றுகிறார்.

முதலில் நம்ப மறுக்கும் குடும்பத்தினர் பின்னர் நயன்தாரா அம்மன் தான் என்பதை உணர்கின்றனர். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி உடன் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக பயணம் செய்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து அந்த ஆசிரமம் கட்டும் முயற்சியை தடுத்தார்களா? எதற்காக நயன்தாரா மூக்குத்தி அம்மனாக வருகிறார்? உண்மையில் அந்த சாமியார் யார்? அவரின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையே மூக்குத்தி அம்மன். கதை எழுதி இயக்கி இருப்பதுடன் நடிக்கவும் செய்துள்ள பாலாஜி  தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். வேகமாக பேசும் பாணியை சில இடங்களில் சற்று குறைத்திருக்கலாம்.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா பொருத்தமான தேர்வு. இவர் பேசும் வசனங்கள் அனைத்துமே நன்றாக உள்ளன. நயன்தாரா அம்மனாக நடிக்கிறாரா? என யோசித்தவர்களுக்கு தன்னுடைய அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் பதில் அளித்துள்ளார். படத்தின் மற்றொரு பிளஸ் பாயிண்ட் என ஊர்வசியை சொல்லலாம். குடும்ப கஷ்டத்தை நினைத்து உருகுவது, பிள்ளைகளுக்காக பொய் சொல்வது, பாரபட்சம் பாராமல் கலாய்ப்பது என நடுத்தர குடும்பங்களின் அம்மாவை கண்முன்னால் கொண்டு வந்துள்ளார். சாமியாராக நடித்திருக்கும் அஜய் கோஷ் , ஸ்மிருதி வெங்கட், மௌலி ஆகியோர் பொருத்தமான தேர்வு.

படத்தின் வேகத்தடை என பாடல்களை தாராளமாக கூறலாம். பெரிதாக மனதில் ஒட்டவில்லை. இதேபோல படம் ஆரம்பித்து கொஞ்சம் லேட்டாக நயன்தாரா எண்ட்ரி கொடுப்பது, மிகப்பெரிய சாமியாருடன் ஆர்.ஜே.பாலாஜி எளிதாக மோதி வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் படத்திற்கு பின்னடைவாக உள்ளன. மிக எளிதாக பாலாஜி வெல்வது போல காட்சிகள் இருப்பது நம்பகமாக இல்லை. நயன்தாரா வந்தவுடன் வேகமெடுக்கும் திரைக்கதை, நீங்கள் பெரிதாக லாஜிக் பார்க்காதவர் என்றால் இந்த மூக்குத்தி அம்மனை குடும்பத்துடன் அமர்ந்து கலகலப்பாக தரிசித்து மகிழலாம்.



Post a Comment

0 Comments