KA PAE RANASINGAM (TAMIL) MOVIE REVIEW

 

KA PAE RANASINGAM (TAMIL) MOVIE REVIEW





நடிகர்கள்: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஶ்ரீ, ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி
இயக்குனர்: விருமாண்டி





விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ரங்கராஜ் பாண்டே, பவானி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று நேரடியாக ZeePlex OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது க/பெ.ரணசிங்கம். இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை KJR Studios நிறுவனம் தயாரித்துள்ளது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில், இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இராமநாதபுரத்து இளைஞராக ரணசிங்கம் (விஜய் சேதுபதி). ஊர் பிரச்சனைகளுக்கெல்லாம் தவறாமல் குரல் கொடுக்கிறார். கூடவே அரியநாச்சியுடனான (ஐஷ்வர்யா ராஜேஷ்) காதல் குறும்புகளையும் நடத்துகிறார். ஒருகட்டத்தில் துபாய்க்கு வேலைக்கு செல்லும் ரணசிங்கம் அங்கேயே இறந்துவிட்ட தகவல் வர, உடைந்து போகிறாள் அரியநாச்சி. தன் கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும், அவர் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற அரியநாச்சி விரும்ப, அங்கே அதிகாரமாக பல்வேறு தடைக்கற்கள் உருவாகிறது. இவையனைத்தையும் கடந்து, தனது கணவரை கடைசியாக பார்க்க அவள் நடத்திய போராட்டங்களும், இறுதியில் என்ன நடந்தது.?, என்பதே இப்படத்தின் க்ளைமாக்ஸ். 


கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களும், அவர்களை அப்படி செல்ல வைத்த குடும்ப மற்றும் சமூக சூழலையும் சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி. குறிப்பாக ஏர்போர்ட் காட்சி., க்ளைமாக்ஸ் உள்ளிட்டவை, வெளிநாடுகளுக்கு சென்ற ஒவ்வொருவரையும் கலங்க வைக்கும் விதம் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. உயிர் பிரிந்த நிலையில், ஒரு பிரபல நடிகைக்கு பிரேக்கிங் நியூஸாக நடக்கும் இறுதிச்சடங்கு, சாமானியனுக்கு எளிதில் நடப்பதில்லை என்ற உண்மையை முகத்தில் அறையும் விதம் சொல்லியிருக்கும் இயக்குநரை கண்டிப்பாக பாராட்டலாம்.

சுமார் மூன்று மணி நேர நீளமும்., அங்காங்கே மெதுவாக நகரும் திரைக்கதையும் சரி செய்யப்பட்டிருந்தால், ரணசிங்கம் தமிழில் வந்த தவிர்க்கமுடியாத படமாக இருந்திருக்கலாம். எனினும், சொல்ல வந்த அவசியமான கருத்தை, யதார்த்தமாகவும் ஆழமாகவும் உணர்ச்சி போராட்டங்களுக்கு இடையில் சொல்லிய விதத்தில், இத்திரைப்படம் நம்மை கவர்கிறது.

Post a Comment

0 Comments