அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள டான் திரைப்படம் வெளியாகி உள்ளது.
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். சமுத்திரகனியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்ததால், சிவகார்த்திகேயன் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் கண்டிப்பாக இருந்து வருகிறார். வாழ்க்கையில் சாதிக்க மாட்டான் என்று நினைக்கும் சமுத்திரகனியிடம், சாதித்து காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார்.
மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் வாழ்க்கை வரலாறு தான் இந்த டான் படத்தின் கதையாகவே இருக்கும் என தோன்றுகிறது. ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் தனது 'சக்கரவர்த்தி' பெயரையே சூட்டி உள்ளார். தன்னுடைய அப்பா கொடுத்த டார்ச்சர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் செய்த அல்லது செய்ய நினைத்த சேட்டைகளின் தொகுப்பாகவே டான் திரைப்படத்தை அவர் உருவாக்கி உள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கல்லூரியில் காமெடி கலாட்டாவிற்கு சிவாங்கி, பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என அனைவரும் ஸ்கோர் செய்கின்றனர். அதே நேரத்தில் கிராமத்தில் தனது நண்பனாக வரும் சூரியுடன் சிவகார்த்திகேயன் செய்யும் அலப்பறைகள் வேற லெவல். அதிலும், ஒரு காட்சியில் சூரியை அப்பாவாக அழைத்து வரும் காட்சியில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.


0 Comments